ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்காரர்களுக்கு 6-ஆவது லக்னத்திலும், 11-ஆவது ராசியிலும் ஆங்கிலப்புத்தாண்டு உதயமாகிறது. ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந் தாலும், ஆட்சிபலம் பெறுகிறார். பாக்கியாதிபதி குரு ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். எனவே, 2020-ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் அனுகூலமாக அமையும். 2020 என்பது ராகுவைக் குறிப்பிடும் 4-ஆம் எண். அவர் 3-ல் இருப்பது சிறப்பு. தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். ஒருசிலருக்கு கடன் கவலை காணப்பட்டாலும், அதனால் கௌரவ பங்கமோ, அபகீர்த்தியோ, கேவல மான சூழ்நிலையோ வராது. ஜாதக தசாபுக்திகள் பாதக மாக இருந்தால், அவ்வப்போது வைத் தியச்செலவுகள் வந்துவிலகும். அல்லது போட்டி, பொறாமையாளர்களை எதிர்த்துப் போராடவேண்டிய நிலை உருவாகும். முடிவில் உங்களுக்கே வெற்றி என்பதை உறுதியாகச் சொல்லலாம். பொதுவாக, எந்த ஒரு ஜாதகத்திலும் திரிகோணம் வலுவாக இருந்தால் அவர்களுக்கு எல்லாமே தெய்வாதீனமாக (குருவருளாலும் திருவருளாலும்) நடக்கும் என்பது ஜோதிடவிதி! கேந்திரம் பலமாக இருந்தால், முயற்சி திருவினையாக்கும் என்பது போல வைராக்கியத்தாலும், சாதனையாலும் வெற்றிபெறலாம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். லட்சுமி கடாட்சம் என்பது அதிர்ஷ்டம்- கேந்திரம் என்பது "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற வள்ளுவர் வாக்குக்குச் சமம்! அதிர்ஷ்டமும் முயற்சியும் இருந்தாலே அவர்தான் ராஜயோகாதிபதியாவார். அதிர்ஷ்டம் இல்லாமல் முயற்சி மட்டும் இருந்தால் "பகீரதப்பிரயத்தனம்' என்று அர்த்தம். அதாவது உழைப்பிற்கேற்ற கூலி மட்டும்தான். அதிர்ஷ்டம், திரிகோண ஸ்தானம் அமைந்தால் போனஸ் கிடைத்தமாதிரி சன்மானம்!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
2020-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 5-ஆவது லக்னத்திலும், 10-ஆவது ராசியிலும் உதயமாகிறது. 5 என்பது திரிகோணம். 10 என்பது கேந்திரம். ஏற்கெனவே சொன்னமாதிரி, திரிகோணம் என்பது லட்சுமி கடாட்சம். கேந்திரம் என்பது விஷ்ணு கடாட்சம். உங்கள் கிரக அமைப்பு இந்த இரண்டுக்கும் பொதுவாக அமைகிறது. அதாவது திரிகோணம்- கேந்திரம் இரண்டும் இணைகிறது. ஆகவே, உங்களுக்கு அட்டமச்சனி நடந்தாலும், அதை ஓரங்கட்டிவிட்டு உங்களுக்கு ராஜயோகம் அமையப்போகிறது. உங்களின் நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் இக்காலம் ஈடேறும். அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் நீங்கள் தேடியலைந்த காலம்மாறி, அதிர்ஷ்டமும் யோகமும் தேடிவந்து உங்களை அரவணைக்கப்போகிறது; ஆட்கொள்ளப்போகிறது. 8-ஆமிடம் என்பது ஒருவகையில் அதிர்ஷ்ட ஸ்தானமாகும். "திருஷ்டம்' என்பது கண்ணுக்குத் தெரிவது; "அதிர்ஷ்டம்' என்பது கண்ணுக்குத் தெரியாதது. மரணமும் யோகமும் கண்ணுக்குத் தெரியாமல் வருவதாகும். அதனால் அமிர்தயோகம், சித்தயோகம் என்றிருப்பதுபோல மரணத்தையும் மரணயோகம் என்றார்கள். அட்டமச்சனியின் பலனாக சிலர் இடம் மாறலாம். சிலர் தொழில் மாறலாம். சிலர் வீடு மாறலாம். சிலர் ஊர் மாறலாம். சிலர் வேலை மாறலாம். ஆக, ஏதோவொருவகையில் மாற்றம் ஏற்படலாம். அந்த மாற்றம் ஏமாற்றமில்லாத முன்னேற்றமாகவே அமையும். ஜாதகத்தில் 8-ஆமிடமும், 12-ஆமிடமும் மாற்றத்தைக் குறிக்கும் ஸ்தானங்களாகும். 8-க்குரிய குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதோடு, 12-க்குடைய செவ்வாயும் உங்கள் ராசியைப் பார்ப்பதால், மாற்றம் நிகழும். தசாபுக்திரீதியாக அந்த மாற்றம் முன்னேற்றமாக அமையட்டும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசியில் ராகு நிற்கிறார். அவரை 6-ல் இருக்கும் செவ்வாய் பார்ப்பதோடு, 7-ல் உள்ள சூரியன், புதன், குரு, சனி, கேது ஆகியோரும் பார்க்கிறார்கள். இதனால் வாழ்க்கையிலும், வேலை அல்லது தொழில்துறையிலும் நன்மைகள் உண்டாகும். புதுமுயற்சிகள் கைகூடும். தொழில் முன்னேற் றத்திற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் கைகூடும். 2020-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு நான்காவது லக்னத்திலும், 9-ஆவது ராசியிலும் உதயமாகிறது. நான்கு என்பது கேந்திரம். ஒன்பது என்பது திரிகோணம். நான்கு விஷ்ணு ஸ்தானம். ஒன்பது திரிகோணம்- லட்சுமி ஸ்தானம். ஆக, இந்த இரண்டும் உங்களுக்கு வலது தோளாகவும், இடது தோளாகவும் அமைந்து, உங்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் என்பது உறுதி! பூமி, வீடு, நிலம், வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகுமென்பது தெளிவு! ஜென்ம ராகு சில நேரங்களில் சில தடைகளையும், குறுக்கீடுகளையும் உருவாக்கினாலும், 7-ஆமிடத்து குரு பார்ப்பதால், அவற்றையெல்லாம் எளிதாக சமாளித்து முன்னேறமுடியும். 7-ல் இருக்கும் சூரியன் உங்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதோடு, 6-ல் உள்ள செவ்வாய் 11-க்கும் உடையவர் என்பதால், உங்களுக்கு முழுவெற்றியையும் தருவது உறுதி! "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்ற வாக்கு உங்களுக்கே பொருந்தும். அதைத்தான் திருவள்ளுவர் "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்றார். "ஞாலம் கருதினும் கைகூடும் காலமறிந்து இடத்தாற் செயின்' என்பதும் குறள்தான். காலம், இடம் இரண்டையும் கண்காணித்துச் செய்யும் முயற்சி எதுவும் தோற்காது; முழு வெற்றியடையும். தேக ஆரோக் கியத்திலும், பொருளாதாரத்திலும் பிரச்சினை இல்லை. தெளிவான நிலை உருவாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
2020 உங்கள் ராசிக்கு மூன்றாவது லக்னத்திலும், எட்டாவது ராசியிலும் உதயமாகிறது. 8 என்பது ஏமாற்றம், இழப்பைக் குறிக்கும்; அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். மூன்றா மிடம் தன்னம்பிக்கை, தைரிய ஸ்தானம்! ஆகவே, உங்களுக்கு தைரியமும் தன்னம் பிக்கையும், வைராக்கியமும் சாதனையும் இருந்தால் ஏமாற்றமும் இல்லை; இழப்புக்கும் இடமில்லை. "அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல சாதனை இருந்தால் சோதனைகளில் வெற்றிபெறலாம். அதற்கான உறுதியையும், மனவலிமையையும் 5-ல் உள்ள செவ்வாய் 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் பெறலாம். கடக ராசிக்கு 10-க்குடைய செவ்வாய் 5-ல் நின்று 11-ஆமிடத்தைப் பார்ப்பது தனி பலம்! அதாவது 10 கேந்திரம். அதற்குடைய செவ்வாய் 5-ல் (விருச்சிகத்தில்) திரிகோணம் பெற்று, ஜெயஸ்தானமான 11-ஆமிடத்தைப் பார்ப்பது சிறப்பு. ஏற்கெனவே எழுதியபடி கேந்திரம் முயற்சி ஸ்தானம். திரிகோணம் லட்சுமி ஸ்தானம். ஆக, உங்களுக்கு முயற் சியும் உண்டு; அதனால் வெற்றிபெறும் அதிர்ஷ்டமும் உண்டு. முக்கியமான கிரகங் களான சூரியன், புதன், குரு, சனி, கேது ஆகியோர் 6-ல் மறைவதால், சிலசமயம் உங்களுக்கு விரக்தி ஏற்படலாம். நம்பிக்கை தளரலாம். அதற்கு இடம்தராமல் நம்பிக்கை யோடும், வைராக்கியத்தோடும் செயல் பட்டால் ஜெயித்துக்காட்டலாம். பகீரதன் என்ற மன்னன் தன் மூதாதையருக்கு பிதுர்த் தர்ப்பணம் செய்ய, ஆகாய கங்கையை பூலோ கத்துக்கு வரவழைக்க கடும் தவமிருந்தான். பல சோதனைகளுக்குப்பிறகு அவன் லட்சியம் ஈடேறியது. அதுவே இப்போது கங்கா நதியாக ஓடுகிறது. அவன் விடாமுயற்சியைத்தான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். அதைதான் திருவள்ளுவரும் "தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். ஆகவே முயற் சியுடையார் என்றும் இகழ்ச்சியடையார்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்கு இரண்டா மிடமான கன்னி லக்னத்திலும், ஏழாமிடமான கும்ப ராசியிலும் 2020-ஆம் ஆண்டு பிறக்கிறது. 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்பம், வித்தை யைக் குறிக்குமிடம். 7-ஆமிடம் என்பது திருமணம், குடும்ப க்ஷேமம், உபதொழில் ஆகியவற்றைக் குறிக்குமிடமாகும். மேலும், சிம்ம ராசிக்கு 5-ல் திரிகோண ஸ்தானத்தில் முக்கியமான கிரகங்கள் எல்லாம் ஒன்றுகூடியிருக்க, அவர்களுக்கு வீடுகொடுத்த குரு ஆட்சி பெற்று சிம்ம ராசியைப் பார்க்கிறார். இது உயர்வான சமாச்சாரம்! "அஞ்சு ஒன்பதுக்கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே புரிவார்' என்பது "சந்திரகாவியம்' எனும் ஜோதிட நூலில் சொல்லப்பட்ட கருத்தாகும். ஆகவே 5-ல் ராசிநாதன் சூரியனும், அந்த வீட்டுக் குடைய குரு ஆட்சியாகவும் இருந்து சிம்ம ராசியைப் பார்க்கிறார்கள் உங்களு டைய எண்ணங்களும் திட்டங்களும் மிகமிக எளிமையாக ஈடேறும் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. இதைதான் "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தமாதிரி' என்பார்கள். நேரம் நன்றாக இல்லாவிட்டால், கோவிலுக்குப் போனாலும் கதவு மூடியிருக்கும்; நடைசாற்றியிருக்கும். நேரம் நன்றாக இருந்தால் கும்பிடப்போன தெய்வம் எதிரே பவனிவரும்! ஒரு அன்பர், நண்பரிடம் கடன் வாங்க வாடகை ஆட்டோ பிடித்துப்போனார். அவர் அங்கில்லை. ஆட்டோ வாடகைகொடுக்க வேண்டுமே என்று வேறொரு நண்பரை நாடிப்போனார். அவருமில்லை. இன்னொரு நண்பரிடம் போனார். அவரிடம் பெரும் பண உதவிபெற வாய்ப்பில்லாமல், வாடகைக்கு மட்டும் கொஞ்சம் பணம் வாங்கி ஆட்டோ வாடகை கொடுத்துவிட்டு, பஸ்ஸில் வீடு திரும்பினார். ஆக, எது கிடைக்கவேண்டுமென்று இருக் கிறதோ அது கிடைக்காமல் போகாது. எது கிடைக்கக்கூடாதென்று இருக்கிறதோ அது கிடைக்காது.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
2020-ஆம் ஆண்டு உங்கள் ராசியில்தான் லக்னமாகப் பிறக்கிறது. 6-ஆவது ராசியான கும்பத்தில் பிறக்கிறது. 6-ஆமிடம் என்பது கடன், எதிரி, நோய், வைத்தியச்செலவைக் குறிக்கும். அதேபோல 10-ஆமிடமான தொழில் ஸ்தானத்துக்கும், வாழ்க்கை ஸ்தானத்துக்கும் 9-ஆமிடமான பாக்கிய ஸ்தானத்தையும் குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் எந்தத் தொழிலைச் செய்வதாக இருந்தாலும், கடன் வாங்காமல் செய்யமுடியாது. கைமுதலே இருந்தாலும் வங்கிக்கடன் வாங்கித்தான் தொழிலதிபர்கள் "ரொட்டேஷன்' செய்வார்கள். அதனால் தொழில் அபிவிருத்திக்காகவும், வீடு, இடம், பூமி, வாகனம் வாங்குவதற்காகவும், வேறு மங்கள நிகழ்ச்சிக்காகவும் கடன் வாங்கலாம். கடன் வாங்குவது தப்பில்லை. ஆனால் தரமானவர்களிடம் கடன் வாங்கவேண்டும். கூட்டு வட்டிக்கும், கொள்ளை வட்டிக்கும் ஆசைப்படுகிறவர்களிடம் கடன் வாங்கினால் கதையே முடிந்துவிடும். அப்படிப்பட்டவர்களை சிந்தித்துதான் கம்பர் இராமாயணத்தில், "கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கினான்' என்று பாடியிருக்கிறார். அதேசமயம் கடன் வாங்கிக் கடனைக் கொடுக்கக்கூடாது. கடன் வாங்கி கடனைக் கொடுப்பவனும், மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று என்பார்கள். அப்படி தாளமுடியாத கடனும், மீளமுடியாத கடனும் இருப்பவர்கள் கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று (கடன்நிவர்த்தி ஸ்தலம்) சாரபரமேஸ்வரரை வழிபடவேண்டும். திருவாரூரில்தான் ரிணவிமோசன லிங்கம் என்று இருக்கிறது. அதைப் பார்த்த பின்புதான், திருச்சேறையில் 11 திங்கட்கிழமை கடன்நிவர்த்தி பரிகாரப் பூஜை செய்ய சுந்தரமூர்த்தி குருக்கள் திட்டம் வகுத்தார். எல்லா அரசியல் வாதிகளுக்கும், தலைவர்களுக்கும் அடியாட்கள் இருப்பார்கள். அதேபோல வருமானம் அதிகமுள்ள அர்ச்சகர்களுக்கும் காபி வாங்கிக் குடிக்க காசு வாங்கும் உதவி யாளர்கள் இருப்பார்கள். ஒருசமயம் திருச்சேறை சென்றபோது சுந்தரமூர்த்தி குருக்களைப் பார்த்து சுவாமி பிரசாதம் வாங்க விரும்பினேன். நான் போன சமயம் அவர் ஓய்வாகப் படுத்திருந்தார். 400 கிலோமீட்டர் பயணம் செய்து கோவிலுக்குப் போன காலம் அவரை சந்திக்க விரும்பினேன். உதவியாளரோ எழுப்ப மறுத்துவிட்டார். நானும் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் திரும்பிவிட்டேன். ஒருகாலத்தில் அவர் மிகவும் ஏழ்மையில் இருந்தவர். அடியேன் கோவிலைப் பற்றி பத்திரிகையில் எழுதி பிரபலப்படுத்தியபிறகு இன்று பெரிய செல்வந்தர் ஆகிவிட்டார். சந்தோஷம்தான். ஆனால் கோவில் தக்காரோ, ஆணையாளரோ வந்தால் அவரை எழுப்பாமல் இருந்திருப்பார்களா? இவை யெல்லாம் ஒரு பாடம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 12-ஆமிடமான கன்னி லக்னத்திலும், 5-ஆமிடமான கும்ப ராசியிலும் 2020 ஆங்கிலப் புத்தாண்டு உதயமாகிறது! எனவே புதுவருடம் செலவையும் ஏற்படுத்தும்; உங்கள் திட்டங்களையும் எண்ணங்களையும் ஈடேற்றும்! அப்படியே செலவுகள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ள- பலன்தரும் செலவுகள்தான். சுபமங்களச் செலவுகள்தான். செலவு என்று வந்தால் வரவும் வரத்தானே வேண்டும்? வரவே இல்லாமலும், கையிருப்பே இல்லாமலும் எப்படி செலவு செய்யமுடியும்? ஆகவே, செலவைப் பற்றி சீரியஸாக சிந்திக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள். இறைக்கிற கிணறு தானே ஊறும். இறைக்காமலே விட்டு விட்டால் ஊற்று அடைபோட்டுப் போகுமல்லவா! "அக்கவுன்டன்ஸி'யில் (கணக்குப் புத்தகத்தில்) வரவு காலம்- பற்று (செலவு) காலம் என்று உண்டு. வரவு இருந்தால்தான் செலவுக் கணக்கு எழுதமுடியும். அந்த வரவு கையிருப்பாகவும் இருக்கலாம். வெளிவரவாகவும் இருக்கலாம். கடன் வரவாகவும் இருக்கலாம். அதுதான் வரவு- செலவு விதி. ஆகவே, செலவு வரும்போது ஏதோ ஒருவகையில் வரவும் வரத்தானே வேண்டும். உதாரணமாக, குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி ஏதாவது வருவதாக அமைந்தால், கையிருப்பு இருந்தால் அதை எடுத்து செலவு செய்யலாம். இருப்பே இல்லாவிட்டால், கடன் வாங்கியாவது செலவு செய்வோ மல்லவா! அதுபோலத்தான் செலவை சரிக்கட்ட வரவுக்கும் வழிபிறக்கும்! கனவு களும் கைகூடும்! 5-ஆமிடம் மக்கள், மனது, மகிழ்ச்சி ஸ்தானமாகும். எனவே பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். திருமணமாக வேண்டியவர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு வேண்டுவோருக்கு புத்திர யோகமும், வேலையில்லாதோருக்கு வேலை யோகமும், வருமானம் இல்லா தோருக்கு வருமான யோகமும் அமையும். "வேண்டுவார்க்கு வேண்டுவது வழங்கும் ஆண்டவன்' என்பார்கள். அது உங்கள் வாழ்க்கையில் ஈடேறும். அதனால்தான் "வாயானை மனத்தானை மனத்தில் நின்ற கருத்தானை- கருத்தறிந்து முடிப்பான் தன்னை' என்று இறைவனைப் பாடினார்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 2020 புது வருடம் 11-ஆவது லக்னம் கன்னியிலும், 4-ஆவது ராசி கும்பத்திலும் பிறக்கிறது. இது இரண்டும் உத்தமமான இடங்கள். 11-ஆமிடம் லாபஸ்தானம், ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம். 4-ஆமிடம் பூமி, வீடு, வாகனம், சுகம், தாய், தன்சுகம் ஆகியவற்றைக் குறிக்குமிடம். ஏழரைச்சனியின் காரணமாக வழக்கு, வில்லங்கம், விவகாரம் ஆகியவற்றையெல்லாம் கடந்தகாலத்தில் சந்தித்தவர்களுக்கு இப்போது தீர்வு ஏற்படும். அதேபோல இடம், பூமி, வீடு சம்பந்தப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றுக்கும் இப்போது தீர்வு கிடைக்கும். உங்கள் பூமிக்குப் (நிலத்திற்கு) போகும் வழியை மறித்து எதிராளி போட்ட தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராளியே பகைமறந்து பாதை வகுத்துக் கொடுக்க முன்வருவார். தேக ஆரோக் கியத்திலும் தெளிவான முன்னேற்றமும் சுகமும் ஏற்படும். தனஸ்தானத்தில் சூரியன், புதன், குரு, சனி, கேது ஆகிய ஐந்து கிரகங் களின் சேர்க்கை இருப்பதால், மிகமிக அனுகூலமான நிலையை எதிர்பார்க்கலாம். 10-க்குடைய சூரியனும், 11-க்குடைய புதனும் 2-ல் இருப்பதால், தொழில்வகையில் லாபமும் தன விருத்தியும் எதிர்பார்க்கலாம். புதன் 8-க்கும் அதிபதி என்பதால், எதிர்பாராத தனவரவும், அதிர்ஷ்டயோகமும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மறைமுக வருமானம் வருவதற்கு 8-ஆமிடத்து ராகு வழி தருவார். மொத்தத்தில் 2020 உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் ஆண்டாக மலரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு 10-ஆமிடமான கன்னி லக்னத்திலும், 3-ஆமிடமான கும்ப ராசியிலும் ஆங்கிலப் புத்தாண்டு மலருகிறது. ஆகவே, இந்த புதுவருடம் வேலை யோகம், தொழில் யோகம் எல்லாம் உண்டாக்கும். ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், மதிப்பு, மரியாதை எல்லாம் உருவாகும். துணிவே துணை என்ற வாசகப்படி, உங்கள் உள்ளத்தில் உறுதியும் வைராக்கியமும் உருவாகும். அதனால் செயற்கரிய செயல்களைச் செய்து சாதனை படைக்கலாம். சோதனைகளை ஜெயிக்கலாம். வேதனைகளை விலக்கலாம். ஜென்மத்தில் சூரியன், புதன், சனி, குரு, கேது ஆகிய ஐந்து கிரகச் சேர்க்கை இருப்பதால், ஜென்மச் சனியின் வேகம் குறையும். ஏழரைச்சனி உங்களுக்கு பொங்குசனியாக பொலிலிவைத் தரும். 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் இணைந்து ஜென்ம ராசியில் நிற்க, அவர்களுக்கு வீடுகொடுத்த குரு 9-ஆமிடத்தைப் பார்க்க, சனி 10-ஆமிடமான வருட லக்னத்தைப் பார்ப் பதால் (கன்னி) உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். ஜென்மச்சனி, சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்களுக்கு மட்டும் பாதகம் தரும். மற்றவர்களுக்கு சாதகச் சனியாகவும், யோகச் சனியாகவும் செயல்படும். அப்படி சந்திர தசையோ சந்திர புக்தியோ நடப்பவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிலிகத்திற்குப் பாலா பிஷேகம் செய்யவும். அதனால் சரீரம், மனது எல்லா வற்றிலும் சஞ்சலம் நீங்கும். சந்தோஷம் உண்டாகும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
2020 ஆங்கிலப்புத்தாண்டு 9-ஆமிடமான கன்னி லக்னத்திலும், 2-ஆமிடமான கும்ப ராசியிலும் பிறக்கிறது. அதனால் இந்த வருடம் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பெருகும். 12-ல் ஐந்து கிரகச் சேர்க்கை இருப்பதால் (சூரியன், புதன், குரு, சனி, கேது), தவிர்க்கமுடியாத செலவுகளும், பயணங்களும் உண்டாகும். 12-ஆமிடம் விரயத்தையும் குறிக்கும்; பயணத்தையும் குறிக்கும்; மாற்றத்தையும் குறிக்கும். எனவே சிலர் வீடு மாறலாம். சிலர் தொழில் மாறலாம். சிலர் வேலைதேடி வெளிநாடு போகலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்தநாட்டில் வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்யலாம். 11-ல் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். அவர் 4-ஆமிடத்திற்கும் அதிபதி. அதனால் தான் இடமாற்றம், வாகனமாற்றம் வரலாம் என்று குறிப்பிட்டேன். 6-ல் உள்ள ராகு உங்கள் கடன்களை நிவர்த்தி செய்வார். போட்டி, பொறாமைகளை விலக்கிவிடுவார். 3, 6, 11-ல் பாவ கிரகங்கள் நிற்க சுபயோகம் உண்டாகும் என்பது பொதுவிதி. ஆகவே, உங்கள் முயற்சிகளில் முன்னேற் றமும், கடமை காரியங்களில் வெற்றியும் எதிர்பார்க்கலாம். குருவும் சனியும் அஸ்தமனமாக இருந்தாலும், இருவரும் 12-ல் மறைவதால் அஸ்தமன தோஷம் பாதிக்காது. "டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ்' என்பது போலவும், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பது போலவும். அஸ்தமன கிரகங்கள் மறைவதால் தோஷம் விலகும். மேலும் ஏழரைச்சனி உங்களுக்கு பொங்குசனியாக மாறும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி தன் ராசியைப் பார்க்கிறார். உங்கள் ராசியிலேயே 2020-ஆம் ஆண்டு பிறக்கிறது. 8-ஆவது லக்னத்திலும் ஆங்கிலப் (கன்னி லக்னம்) புதுவருடம் பிறப்பதால் இடையூறுகளையும் தடைகளையும் சந்திக்கநேரும். 10-ல் செவ்வாய் ஆட்சி என்பதாலும், 11-ல் குருவும் ஆட்சி என்பதாலும் வைராக்கியமும் விடாமுயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். தோல்வியைத் துரத்தியடிக்கலாம். 7-க்குடைய சூரியனும், 5-க்குடைய புதனும் 11-ல் ஒன்று சேர்வதால் "புதாதித்ய யோகம்' அமைகிறது. அவர்களுக்கு வீடுகொடுத்த குருவும் அங்கு ஆட்சி என்பதால், தைரியமும் தன்னம் பிக்கையும் அதிகரிக்கும். அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபாடுடையவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி யோகமும், மதிப்பும் மரியாதையும், செல்வாக்கும் சிறப்பும் தேடிவரும். "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்னும் பழமொழிப்படி, வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் ஒருமுறைதான் தேடிவந்து வாசற் கதவைத் தட்டும் என்பார்கள். சென் றாண்டு தொடங்கிய பல முயற்சிகளும், காரியங்களும் பூர்த்தியடையாமல் அரைகுறையாக விடுபட்டிருந்தால், இந்த வருடம் எல்லாவற்றையும் சிறப்பாக ஈடேற்றலாம். 3-ஆமிடம் சகோதர ஸ்தானம், செவ்வாய் சகோதரகாரகன். 3-ஆமிடத்தை ராகு பார்க்க, செவ்வாய் ராகுவைப் பார்ப்பதால், உடன் பிறந்தவர்களோடு நிலவும் உரசல்கள் விலகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7-ஆவது லக்னத்தில் (கன்னி), உங்கள் ராசிக்கு 12-ஆவதான கும்ப ராசியில்- சதய நட்சத்திரத்தில் ஆங்கில வருடம் 2020 உதயமாகிறது. சதயம் ராகுவின் நட்சத்திரம். கும்பம்- சனியின் ராசி. சனியும் ராகுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள் வதால், இந்த வருடம் உங்களுக்கு தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். பூமி, வீடு, வாகன யோகம் உண்டாகும். அதேபோல செய்யும் வேலையில் தெளிவும் திருப்தியும் உண்டாகும். கடமைக் காரியங்களில் கருத்தும் கவனமும் அதிகரிக்கும். எந்தச் செயலைச் செய்தாலும் அதை சீரும்சிறப்புமாக செயல்படுத்து வதால், மனதில் மகிழ்ச்சியும், மற்றவர் களின் பாராட்டும் பெருகும். 10-ல் ஏற்படும் ஐந்து கிரகச் சேர்க்கை உங்களுக்கு செல்வாக்கையும், சொல்வாக்கையும் செல்வத்தையும் வாரிவழங்கும். 9-க்குடைய செவ்வாய் 9-ல் ஆட்சி. 10-க்குடைய குரு 10-ல் ஆட்சி. எனவே பூர்வபுண்ணியவசத் தால் குருவருளும் திருவருளும் பெருகி உங்களுக்குப் புகழையும் பெருமையையும் ஏற்படுத்தும். உங்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமையும் ஆற்றலும் வெளியாகி பெருமை சேர்க்கும். 4-ல் உள்ள ராகு தாயாருக்கோ தேக சுகத்திற்கோ சிலசமயம் கஷ்டத்தை ஏற்படுத்தினாலும், துர்க்கை அல்லது வடக்குப் பார்த்த அம்மனை வழிபட்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
--------------- இந்த வார ராசிபலனை 2020-ஆம் வருடப் பலனாக எழுதியுள்ளேன். விகாரி வருடம், மார்கழி மாதம், 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு 2020-ஆம் ஆண்டு உதயமாகிறது. வளர்பிறை சஷ்டி திதி, சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னம். ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டு கன்னி லக்னத்தில்தான் பிறக்கும். திதி, நட்சத்திர கிரக நிலைகள் மாறும். 2020 என்பது எண்கணிதப்படி 4 வரும். 1-1-2020 என்பது 6 வரும். 4 ராகு. 6 சுக்கிரன். வருடம் பிறக்கும் லக்னத்துக்கு (கன்னிக்கு) 5-ல் சுக்கிரன் திரிகோணமாகவும், ராகு 10-ல் கேந்திரமாகவும் நின்று பலன் தருவார்கள். சுக்கிரன் சுபகிரகம் - திரிகோணம் பெறுவதும், ராகு அசுப கிரகம்- கேந்திரம் பெறுவதும் சிறப்பு. எனவே 2020 இனிய ஆண்டாக விளங்கும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக, ராகு தசை, ராகு புக்தியும், சுக்கிர தசை, சுக்கிர புக்தியும் நடக்கும் ஜாதகர்கள் இந்த வருடம் நல்ல யோகத்தை அடைவார்கள். அடுத்து கன்னி லக்னம், கன்னி ராசிக்காரர்களுக்கும், கும்ப ராசி, கும்ப லக்னத்தாருக்கும் 2020 இனிய ஆண்டாகத் திகழும். எண்ணங்கள் ஈடேறும்; திட்டங்கள் வெற்றியடையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் வெல்லும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நிறைவேறும். பழைய கடன்கள் அடைபடும். ஆரோக்கியம் பெருகும். அரசியல் வட்டாரத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழும். கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு புதுமைகளைப் புகுத்துவார்கள். தமிழகத்திலோ வடநாட்டிலோ பிரபலமான அரசியல் தலைவருக்கு ஆயுள் கண்டம் உண்டாகும். விலைவாசி உயர்வாக இருந்தாலும், மக்களுக்கு வாங்கும் சக்தியும் ஏற்படும். மழைவளம், நீர்வளம், நிலவளம் நன்றாக இருந்தாலும், அக்னி பயமும், விபத்துகளும் நிகழ இடமுண்டு. அவரவர் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, கிரக உபாதைகளில் இருந்து விடுபடலாம்.